பிசிஆர் இயந்திரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை - மாநகர முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice பிசிஆர் இயந்திரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை - மாநகர முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice

பிசிஆர் இயந்திரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை - மாநகர முதல்வர் மணிவண்ணண்



பிசிஆர் இயந்திரத்தைப் மாநகர சபைக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கின்றோமென யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுப் பரவல் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழில் ஏறத்தாழ 3000 பிசிஆர் மாதிரிகள் ஒவ்வொருநாளும் சேகரிக்கப்படுகிறது. யாழில் போதனா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் மருத்துவ பீடத்தில் 
பிசிஆர் பரிசோதனை இடம்பெறாமல் செயலிழந்ததாக செய்திகள் வந்தது. 

அதன் காரணமாக இங்கு பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றது. இது தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்துகிறது . இதன்காரணமாக கொரோனாத்  தொற்று மேலும் பரவ வழிவகுக்கும். பிசிஆர் பரிசோதனை  செய்யப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியவர பல நாட்களாகின்றன . பிசிஆர் மாதிரிகளை வழங்கியவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுவதால் தொற்றுப்பரவல் அதிகரிக்கிறது. 

இதனால் யாழ் மாநகரசபை பிசிஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பிசிஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக பிசிஆர் பரிசோதனைகளை எதிர்காலத்தில் செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம். இதனால் மிக வேகமாக பரிசோதனை முடிவுகளை அறிவிக்க கூடியதாக இருக்கும். இது கொரோனாத் தொற்றுப் பரவலை  கட்டுப்படுத்த பாரியளவில் உதவும் என்று நம்புகிறோம். 

ஒரு நன்கொடையாளி ஒருவரிடம் பிசிஆர் இயந்திரத்தை பெறுவதற்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளேன் . இதேபோல் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் யாராவது மாநகர சபைக்கு பிசிஆர் இயந்திரமொன்றை அன்பளிப்பு செய்வார்களாக இருந்தால் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த பணியை முன்னெடுக்க இலகுவாக இருக்கும் என நான் நம்புகிறேன் 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காரணத்தால் மாநகரசபை பணியாளர்களும் உறுப்பினர்களுக்கும்
சுகாதார தொண்டர்களுக்கும் கொரோனா தொற்று வீதம் அதிகமாக உள்ளதன் காரணமாக நாம் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி வழங்க சுகாதாரத் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.எமது பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கப்பட்ட பின்புதான் தடுப்பூசியை நான் பெற்றுக் கொள்வேன்.

நல்லூர் பின்பகுதியில் உள்ள அரசடி பகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது இந்த முடக்கம் 10 நாட்களுக்கு தொடரும். அதிக கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது . அப்பகுதிக்கு நீர் விநியோகத்தை யாழ் மாநகரசபை செய்துகொண்டிருக்கிறது. தேவை ஏற்படின் கிராமசேவகர் ஊடாக நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படும்  என்று தெரிவித்தார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post