குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் - ரவிகரன் - Yarl Voice குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் - ரவிகரன் - Yarl Voice

குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் - ரவிகரன்




முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே குருந்தூர்மலையினை மீட்க வழக்கு விரைவில் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அண்மைக்காலமாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அங்கு பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. கடந்த 16.06.2021அன்றும் அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள குருந்தூர்மலை என்பது தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமாகும். 

அவ்வாறான பூர்வீக வழிபாட்டு இடத்திலேயே தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள், அரசதிணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அனுசரணையுடன் பௌத்த மதத் திணிப்புநடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

குறிப்பாக கடந்த 2018.09.04ஆம் திகதி அன்று முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதியில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று, பௌத்த சின்னங்களுடனும், கட்டுமானப் பணிக்கான பொருட்களுடனும் வருகை தந்திருந்தனர். 

இதை அறிந்த நாம் குமுழமுனைக் கிராமமக்களுடன் சென்று, அவ்வாறு வருகைதந்தவர்களை வழிமறித்து ஒட்டுசுட்டான் போலீசாரிடம் ஒப்படைத்திருந்தோம்.

இதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பிலே ஒட்டுசுட்டான் போலீசார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்றினைத் தாக்கல்செய்திருந்தனர். 

அவ்வாறு ஒட்டிசுட்டான் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குவிசாரணைகள் இடம்பெற்றன. 

இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் 
கடந்த13.09.2018 அன்றைய தினம் இந்த வழக்கு சார்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் சில கட்டளைகள் வழங்கப்பட்டன. 

நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளில் குறிப்பாக, தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை.
குறித்த பகுதியினுள் புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வுப் பணி என்பன மேற்கொள்ளக்கூடாது. 
மேலும் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் வேறு மதத்தினைச் சேர்ந்த கோவில்களை அமைக்க முடியாது. 

அவ்வாறு அமைப்பதாகவிருந்தால் காவற்றுறையில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ள முடியும். 
அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்வதாகவிருந்தால் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையினருடனும், மூத்த வரலாற்று ஆய்வாளர்களுடனும், 
குறித்த கிராமத்தினைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களுடனும் மேற்கொள்ளப்படல் வேண்டும். 
அந்த பகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வர முடியாது என பல கட்டளைகளை நீதிமன்று பிறப்பித்திருந்தது. 

இவ்வாறாக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 27.09.2018 அன்று குறித்த வழக்கினை தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் நகர்த்தல் பத்திரம்(மோசன்) தாக்கல் செய்து வழக்கினை மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். 

இவ்வாறு மீள எடுத்துக்கொண்ட வழக்குவிசாரணைகளில் பௌத்த குருமார்களின் சார்பாக முன்னிலையான தொல்பொருள் திணைக்கள சட்டத்தரணிகள், குருந்தூர் மலைப்பகுதியில்  'குருந்த அசோகாராம'  பௌத்த வழிபாட்டு தலம் இருந்துள்ளது என்றும், வர்தகமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இதன் படி அது தொடர்பில் ஆய்வு செய்யவே 04.09.2018அன்று தேரர்கள் தலைமையிலான குழுவினர் சென்றதாகவும்  நீதிமன்றிலேதெரிவித்தனர். 

இந்த சம்பத்தினை பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போன்றோர் மக்களை திரட்டி குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்றும், உண்மைக்கு புறம்பாக விகாரை அமைக்கும் முயற்சி என திரிவுபடுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பௌத்த தேரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மேலும் நீதிமன்றில் தெரிவித்தனர். 

இதேவேளை குருந்தூர்மலைப்பகுதியில் தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே தாங்கள் வந்துள்ளதாக மன்றில் தெரிவித்ததுடன், அதற்கு அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தனர். 
இவற்றினை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பிலான வழக்கு விசாரணைளை  01.10.2018ஆம் நாளுக்குத் திகதியிட்டிருந்தார். 

மேலும் அடுத்த தவணையின்போது வழக்குத் தாக்கல்செய்து அறிக்கை சமர்ப்பித்த போலீசார் பாதிக்கப்பட்டவர்சார்பிலும், சம்பந்தப்பட்டவர்சார்பிலும் இருந்து ஒரு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு அவ்வறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என நீதிமன்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. 

தொடர்ந்து 01.10.2018 அன்று வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்லியல் திணைக்களம்தான் பிக்குகளை குருந்தூர் மலையில் ஆய்வு செய்வதற்கு அனுப்பியதாக தொல்லியல் திணைக்களம் சார்பில் ஆயராகிய சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். 

இதன் போது கிராம மக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.புவிதரன் தலைமையில் ஆயராகிய சட்டத்தரணிகள், 
குருந்தூர் மலைப்பகுதியினை அண்மித்த பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் அனைத்தும் 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டதற்கான பத்திரங்கள் வைத்துள்ளார்கள். 

அவர்களின் காணிகளையும் தொல்பொருள் திணைக்களம் எல்லைப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் அங்கு தமிழர்கள்தான் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் அந்த மலையில் சிவன் மற்றும் ஜயனார் ஆலயங்கள் வைத்து பலநூறு ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். 

அந்தவகையில் அங்கு தொல்பொருள் திணைக்களம் குறிப்பிடுவது போன்று பௌத்த விகாரை அமைந்திருந்தமை தொடர்பில் அதனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தால் அதனை தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ளலாம். அதற்கு பௌத்த மதகுருமார்கள் அங்கு சென்று ஆய்வு செய்ய என்ன தகமை உண்டு. இந்த அதிகாரம் அவர்களுக்கு யார் வழங்கியது. 

இவ்வாறு செயற்பட்டு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்வது தவறாகும் என தமிழ் மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தமது வாதத்தினை முன்வைத்தார்கள். 

இந்நிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் எவ்வாறு பௌத்த மதகுருமார்களை தொல்பொருள் திணைக்கள ஆய்விற்கு பயன்படுத்துவீர்கள்? என நீதிமன்று கேட்ட போது, தொல்பொருள் திணைக்களத்திடம் நிதி பற்றாக்குறை காரணத்தால் குறித்த விகாரை தொடர்பில் ஆய்வு பணியினை பௌத்த குருமார்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தார்கள். 

தொல்பொருள் திணைக்களத்தின் குறித்த கருத்தை நிராகரித்த நீதிமன்று, பௌத்த மதகுருமார்களுக்கு இந்த ஆய்வினை நடத்தும் அதிகாரம் யார் வழங்கியது என்றும், அவர்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள என்ன தகைமை உண்டு. இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்முடியாது எனவும் நீதி மன்று எச்சரிக்கை செய்திருந்தது.

இந் நிலையில் ஓர் ஆண்டிற்கும்மேலாக இப் பிரச்சினை அமைதியான நிலையிலே இருந்துவந்தது. 
நீதிமன்று வழங்கிய கட்டளைகளின் பிரகாரம் குருந்தூர் மலைக்கு தமிழ் மக்கள் சென்று அங்குள்ள ஆதி ஐயனாருக்கு விசேட பூசை மற்றும் பொங்கல் வழிபாடுகளை சிறப்பான முறையில் செய்துவந்தனர். 

 நிலைமைகள் சுமூகமாக இருந்துவந்தன. 
இந் நிலையில் மீண்டும் கடந்த2020ஆம் ஆண்டின் செப்ரம்பர் மாதப் பகுதியில் மீளவும் ஓர் பிரச்சினை தலைதூக்கியது.
அது என்னவெனில் குருந்தூர் மலைப் பகுதியில், கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முனைப்புக்காட்டி வந்திருந்தது. 

இதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் கடந்த 2020 செப்ரெம்பர் மாதம் 09ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்றினை நாடியதுடன், ஏற்கனவே இதுதொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கினை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள கட்டுமானம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு மன்றினை கோரியிருந்தனர். 

அதன் அடிப்படையில் இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிமன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு அழைப்பாணை உத்தரவினைப் பிறப்பித்ததுடன், 2020 செப்ரெம்பர் 10ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைக்கான திகதியிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய கோவில் நிர்வாகத்தினர், தொல்பொருள் திணைக்களத்தினர், பொலிசார் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் இவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. 
குறிப்பாக வழக்கு விசாரணையின்போது, காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களே தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் விகாரைகள் எதனையும் தாம் அமைக்கவில்லை என தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவ்வாறு குருந்தூர் மலைப் பகுதியில் காவலரண் அமைப்பதற்கு மாவட்ட செயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர். 

அதற்கமைய நீதிமன்று மன்று காவலரண் அமைப்பதற்கு இணங்கியதுடன், ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இரு தரப்பினரும் இணங்கியது போன்று, இரு தரப்பினரும் மதத்தோடு தொடர்புடைய எவ்வித கட்டுமானங்களையும் அங்கு மேற்கொள்ளப்போவதில்லை என்ற இணக்கத்தினை தொடர்வதெனவும், தொல்பொருள் திணைக்களம் அப் பகுதியில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென ஒவ்வொருமுறையும் அது தொடர்பான அறிக்கைகளை மற்றுக்கு சமர்ப்பிக் கவேண்டும் எனவும் இணக்கமான முடிவொன்று அன்றைய தினம் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் ஐனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள், காணிகள் உள்ளடங்கிய குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை  மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் 18.01.2021அன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இராணுவத்தினர் புடைசூழ  தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சின்  செயலாளர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர். 

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. 

அதேவேளை மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும்  கல்யாணிபுர என்னும் மற்றும் ஒரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அன்றைய தினமே அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 
இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்ட பட்டு நூற்றுக் கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார்  பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம்வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டது. 

அதேவேளை குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் ஐயனார் ஆலயம் காணப்பட்ட நிலையில்  அங்கு குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். 

இந் நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது. 

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச்செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர். 

இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர்மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு 27.01.2021அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம். 

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர்.

 பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம். 

இதனைவிட ஆலயநிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப் போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது. 

மேலும் கடந்த 10.09.2020 அப்பகுதி மக்களின் முறைப்பட்டிற்கு அமைய குருந்தூர்மலைப் பகுதிக்கு சென்றபோது அப்போதும் அங்கு இருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது. 

அதேவேளை கடந்த 01.10.2020 அன்று குமுழமுனைப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றபோது, அமைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னமான முச்சூலம், அருகே இருந்த காட்டிற்குள் உடைத்து வீசப்பட்டிருந்ததை அவதானித்திருந்தனர். 

இந்நிலையில் குறித்த சூலத்தினை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்து அன்றைய பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2021 அன்று அமைச்சர் வருகைதந்தபோது மீண்டும் அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றபட்டுள்ளது என்பதே அப்பகுதிமக்களின் கருத்தாகும். 

இதிலே குறிப்பாக கடந்த 10.09.2020 நீதிமன்றில் இடம்பெற்ற இந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புக் கோரியிருந்தது. 

இந் நிலையில் நீதிமன்று தொல்லியல் திணைக்களம் கோரியதற்கமைய குருந்தூர்மலை வளாகத்தில் ஊர்காவல்படையின் பாதுகாப்பு காவலரண் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேதான் அங்கு பாதுகாப்பு தரப்பினர் இருந்த நிலையில், அங்கிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. 
இந் நிலையில் இவ்வாறு தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலே, 27.01.2020 அன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் அப்பகுதிக் கிராமமக்களின் சார்பாக நான் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்தேன். 

மேலும் குறித்த முறைப்பாட்டிலே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும் எனவும், அங்கு தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கவேண்டும்எனவும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தேன். 

இதன் தொடர்ச்சியாக இவ்வாறு குருந்தூர் மலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் தொடர்பிலும், அங்கு இடம்பெறும் தொல் பொருள் ஆய்வு தொடர்பிலும் வழக்கொன்றை தொடர்வது தொடர்பில் நாம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். 

அவ்வாறு வழக்கொன்றினைத் தொடர்வதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களைச் சந்தித்து பேசியதுடன், வழக்கினைத் தொடர்வதற்கான ஆவணங்களையும் அவரிடம் கையளித்துள்ளோம். இந்நிலையில் வழக்கொன்றைத் தொடர்வதற்கான முழுமுயற்சி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. 

இதற்கிடையிலேதான் கடந்த 10.05.2021அன்று தொடக்கம் 11.05.2021வரையில் குருந்தூர்மலையில்  தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார நடமுறைகளை மீறி பௌத்த வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. 
இது தொடர்பாக அப்பகுதிமக்கள் எமக்கு முறையிட்டதற்கமைய, அது தொடர்பில் ஆராய்வதற்காக குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம். 

அங்குசென்றபோது இராணுவத்தினர் குருந்தூர்மலைப் பகுதிக்கள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். பின்னர் தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்திவிட்டு எம்மை உள்ளே செல்வதற்கு அனுமதித்திருந்தனர். 

அங்கு குருந்தூர் மலை அடிவாரத்திற்குச் சென்றபோது அங்கும் இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர். 
அவ்வாறு பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். 

அத்தோடு குறித்த இராணுவத்தினர் கொவிட் -19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத நிலையினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே நாம் அவர்களிடம்  கொவிட்-19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதமை தொடர்பில் வினவியபோது அவர்கள் சற்றுத் தடுமாறியதுடன் உடனேயே அவர்கள் முகக் கவசங்களை அணிந்துகொண்டனர்.

அதேவேளை அங்கு இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரித்தோம். அதற்கு அவர்கள் அங்கு ஓர் வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றதாக எம்மிடம் தெரிவித்திருந்தனர். 

மேலும் இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிடும்போது, பௌத்த பிக்குகள் கிட்டத்தட்ட 29பேர் அங்கு வந்திருந்ததாகவும், அத்தோடு கிட்டத்தட்ட30 முச்சக்கரவண்டிகள் அங்கு வந்ததாகவும் அதில் வந்தவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

இதுதவிர ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நட்சத்திரத் தரங்களில் உள்ள அதி சொகுசு இராணுவ வாகனங்கள், ஐம்பதிற்கும்மேற்பட்ட சொகுசுவாகனங்கள், இராணுவ வாகனங்கள் என பல வாகனங்கள் அங்கு சென்றதாகவும் பொதுமக்கள் எம்மிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந் நிலையிலே மீண்டு குருந்தூர் மலையில் கட்டடம் ஒன்று அமைப்பதற்கு கடந்த 16.06.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையினை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
எனவே நாம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்அவர்களுடன் இணைந்து வழக்கு ஒன்றினைத் தொடர்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். 

அந்த வழக்கினைத் தொடர்வதற்கு பாரிய அளவில் ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். வழக்குத் தொடர்வதற்கான பெரும்பகுதி வேலைத்திட்டங்கள் முடிவுற்றுள்ளன. எனவே விரைவில் வழக்குத் தொடரப்படும். 

அவ்வாறு எம்மால் தொடரப்படும் வழக்கின் ஊடாக, தமிழர்களின் காணாமல் ஆக்கப்பட்ட வழிபாட்டு அடையாளங்களை மீள நிறுவுவதற்கும், எமது பூர்வீக குருந்தூர்மலையில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை தடுப்பதற்குமான முழுயற்சிகளையும் தீவிரமாக மேற்கொள்வோம் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post