நான் இருக்கும் மனநிலையில்தான், தானும் இருப்பதாக முதல்வர் சொன்னார்"- அற்புதம்மாள் - Yarl Voice நான் இருக்கும் மனநிலையில்தான், தானும் இருப்பதாக முதல்வர் சொன்னார்"- அற்புதம்மாள் - Yarl Voice

நான் இருக்கும் மனநிலையில்தான், தானும் இருப்பதாக முதல்வர் சொன்னார்"- அற்புதம்மாள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் பரோலில் 4-வது முறையாக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று இருப்பதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும், பேரறிவாளனுக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அதற்காக பரோல் வழங்க தமிழக அரசுக்கு அற்புத்தம்மாள் விண்ணப்பித்தார். இதனையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அற்புதம்மாள் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்தேன் என்று கூறினார்.

கடந்த கொரோனா பாதிப்பின் போது பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து 30 நாட்கள் முதலமைச்சர் பரோல் அளித்தார் முதல்வர். அதற்கு நன்றி தெரிவித்தேன்.

பேரறிவாளனுக்கு உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, உடல் நலன் சார்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பரோல் நீட்டிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தேன்.

நிச்சயம் முடிந்ததை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். நீங்கள் இருக்கும் உணர்வோடு தான் நானும் உள்ளேன் என முதல்வர் கூறினார் என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post