தம்மை மீட்டு அனுப்பியவர்களுக்கு நேரில் வந்து நன்றி கூறினார் ஏழாலை வயோதிபத் தாயார்! - Yarl Voice தம்மை மீட்டு அனுப்பியவர்களுக்கு நேரில் வந்து நன்றி கூறினார் ஏழாலை வயோதிபத் தாயார்! - Yarl Voice

தம்மை மீட்டு அனுப்பியவர்களுக்கு நேரில் வந்து நன்றி கூறினார் ஏழாலை வயோதிபத் தாயார்!
ஏழாலையில் இருந்து வழிதடுமாறி பொன்னாலைக்கு வந்த நிலையில் மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட சிவபாதம் லீலாவதி அம்மா (வயது-75) இன்று (22) பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளை மேற்கொண்டதுடன் தம்மை மீட்டு அனுப்பியவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். 

அத்துடன், தம்மை மீட்பதில் பங்கெடுத்திருந்த கடற்றொழிலாளர்களுக்கும் ஏற்றிச் சென்று ஏழாலையில் உறவினர்களிடம் ஒப்படைத்த முச்சக்கரவண்டிச் சாரதிக்கும் பெறுமதிமிக்க உலருணவுப் பொருட்களையும் வழங்கி தமது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். 

கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வயோதிபப் பெண்மணி பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாகவுள்ள கடற்பிரதேசத்தில் கடலுக்குள் நின்றிருந்த நிலையில் கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்களால் மீட்கப்பட்டார். 

அவர் பின்னர் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலுக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், பொன்னாலை கிராம சேவையாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை பாதுகாப்பாக உறவினர்களிடம் அனுப்பிவைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். 

பொன்னாலை ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் மற்றும் உறுப்பினர்களும்   வட்டுக்கோட்டை பொலிஸாரும் இங்கு பிரசன்னமாகி இருந்தனர். 

இந்நிலையில், தமது தாயாரை மீட்டு அனுப்பிவைத்தவர்களுக்கு தாயாரையும் நேரில் அழைத்துச் சென்று நன்றி கூறுமாறு நோர்வேயில் உள்ள அவரது மகன் சிவபாதம் பகிரதன் தமது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டார். 

அதற்கிணங்க தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் (1989 ஓ.எல்) பழைய மாணவர்களான நண்பர் குழாம் இன்று தாயாரை அழைத்துவந்து நன்றி கூறியது. 

இச்செயற்பாட்டில் பகிரதனின் நண்பர்களான வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள்  ச.செல்லகாந்தன், எஸ்.சர்வேஸ்வரன் மற்றும் யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் அ.லிங்கராஜ், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்.செல்வரமேஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். 

குறித்த வைபவம் இன்று காலை 8.30 மணிக்கு பொன்னாலை கிராம சேவையாளர் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. இதன்போது பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, கிராம சேவையாளர் ந.சிவரூபன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.உமணகேனன் ஆகியோர்  கலந்துகொண்டனர். 

இதேவேளை, பூரண சுய நினைவுடனும் சுகதேகியாகவும் உள்ள மேற்படி தாயார், தாம் எப்படி பொன்னாலைக்கு வந்தார் என்பதை இதுவரை உணராதவராகவே உள்ளார். மல்லாகம் சந்தியைத் தவிர தாம் எங்கும் செல்லவில்லை எனவும் தெரிவித்தார். எனினும், தம்மை மீட்டு அனுப்பியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post