பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற செயற்பாடு! ஜங்கரநேன் குற்றச்சாட்டு - Yarl Voice பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற செயற்பாடு! ஜங்கரநேன் குற்றச்சாட்டு - Yarl Voice

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற செயற்பாடு! ஜங்கரநேன் குற்றச்சாட்டு


வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும் பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற ஒரு பொறிமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று முன்னாள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஜங்கரநேன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கும் போது

தமிழ் மக்களுடைய அதிருப்தி எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி  எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களுக்கு பிரதம செயலாளர் பதவியை வழங்கியிருக்கின்றார். 

இலங்கையில் மாகாணசபை தோற்றம் பெற்றது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக வடிவமைத்ததிற்குப் பிறகு அந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. 

தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரித்து ஒரு தமிழ் மாகாணமாக உருவாக்கப்படும் போது தென்னிலங்கையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படும் என்ற காரணம் காட்டி மிகத் தந்திரமாக அப்போதைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அவர்கள் ஏனைய மாகாணங்களுக்கும் மாகாண சபைகளை உருவாக்கி இலங்கையில் 9 மாகாண சபைகளை உருவாக்கியிருந்தார்.

உண்மையில் தென்னிலங்கை மக்களுக்கு மாகாண சபைகள் தேவையற்றதாக இருக்கும் பொழுது தேசிய இனப்பிரச்சினையின் விளைவாக தமிழ் மக்களுக்கு மாத்திரமே உருவாக்கப்பட இருந்த இந்த மாகாண சபை முறைமை இலங்கை முழுவதற்கும் பரவலாக்கப்படிருந்தது.

 இது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் மக்களுடைய மொழி ரீதியான இன ரீதியான பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபைக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள அதிகாரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரியாக நியமித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. இது இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினைக்கான காரணத்தை அடியோடு நிராகரிக்கின்ற அரசினுடைய எதேச்சாரிகரமான போக்காக நாங்கள் பார்க்கின்றோம். 

வடக்கு மாகாணத்தினுடைய பிரதம செயலாளராக நியமிக்கப்பட வேண்டியவர் மாகாண முதலமைச்சரின் ஒப்புதலின் பேரிலேயே நியமிக்கப்பட வேண்டியவர். 

ஆளுநர் முதலமைச்சரின் பரிந்துரை தேவையில்லை. ஆனால் பிரதம செயலாளர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டாலும் கூட அதற்கான உடன்பாடு முதலமைச்சரினால் வழங்கப்படிருக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்கின் உடைய முதலாவது சபையின் ஆயுள் காலம் முடிவடைந்த பிறகு இரண்டு வருடங்கள் கடந்தாலும் கூட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் கபட நோக்குடன் தேர்தலை பிற்போட்டுக் கொண்டு மாகாண சபைக்கூடாக தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய குறைந்த பட்ச அதிகாரங்களை கூட பிடுங்குகின்ற சதித்தனமான முயற்சியை இந்த அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு ஏதுவாக துணைபோகக்கூடிய வகையிலேயே ஆளுநரையும் நியமனம் செய்திருக்கின்றது. அது போல இப்பொழுது பிரதம செயலாளரையும் நியமனம் செய்திருக்கிறது.

எங்களைப் பொறுத்த வரையில் தமிழ் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும். மக்களுடைய நிர்வாகம் இலகுபடுத்தப்படல் வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழி ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 ஆகவே பிரதம செயலாளர் தமிழ் மொழி தெரிந்தவராக இருத்தல் வேண்டும். இந்த அதிகாரிக்கு தமிழ் தெரியாது என்று சொல்லப்படுகிறது தெரிந்தாலும் கூட இந்த பிரதம செயலாளர் கதிரையில் அமரக் கூடாது என்பது எங்களுடைய ஆணித்தரமான அபிப்பிராயம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post