இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது சர்வதேச இருதய நாளில் மருத்துவ பீடாதிபதி தகவல்! - Yarl Voice இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது சர்வதேச இருதய நாளில் மருத்துவ பீடாதிபதி தகவல்! - Yarl Voice

இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது சர்வதேச இருதய நாளில் மருத்துவ பீடாதிபதி தகவல்!




இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது, இருதய நோய்க்கான ஆபத்தான காரணிகள் உடற் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. இருதய நோய்களுக்கான பிரதான ஆபத்தான காரணியாக நீரிழிவு நோய் திகழ்கின்றது. இருதய நோய்களினால் ஏற்படும் இழப்புக்களில் 10 %   அதிக குருதி குளுக்கோஸ் நிலமையினால் ஏற்படுகின்றது என்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும்  இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோய் தொடர்பான சர்வதேச ஆய்வு செயற்றிட்டத்தின் இலங்கைக்கான இணைப்பாளரும், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியுமான மருத்துவர் இ.சுரேந்திரகுமாரன் தெரிவித்தார். 

சர்வதேச இருதய நாளான இன்று, ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்காம் பல்ககலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டிணைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோய் தொடர்பான சர்வதேச ஆய்வு செயற்றிட்டம் தொடர்பாக  அறிவூட்டும் வகையில் ஊடக விபரிப்பு ஒன்று  யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 

இந்த ஊடக விபரிப்பின் போது, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி எம். குருபரன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். குமரன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,  நரம்பியல் விசேட வைத்திய நிபுணருமான வைத்தியக் கலாநிதி அ.அஜினி மற்றும் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த ஊடக விபரிப்பில் குறிப்பிடப்பட்ட  மருத்துவர் இ.சுரேந்திரகுமாரன்  குறிப்பிட்ட விடங்கள் வருமாறு: 

ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்காம் பல்ககலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டிணைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வு

இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது, இருதய நோய்க்கான ஆபத்தான காரணிகள் உடற் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. இருதய நோய்களுக்கான பிரதான ஆபத்தான காரணியாக நீரிழிவு நோய் திகழ்கின்றது. இருதய நோய்களினால் ஏற்படும் இழப்புக்களில் 10 %   அதிக குருதி குளுக்கோஸ் நிலமையினால் ஏற்படுகின்றது. இந்த நோய் நிலமைகளை சீராக முகாமைத்துவம் செய்வதற்காக உள்;ர் தரவுகளை சேகரிப்பதற்கான திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படடுள்ளது.

இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான ஆய்வுகளைத் திட்டமிடுவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வியலாளர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோய் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் 80 மில்லியன் இலங்கை ரூபாயினை இவ் ஆய்வுக்காக பங்களிப்புச் செய்துள்ளதுடன் மேலும் பல நிதிவாய்புக்களை உருவாக்கித்தந்துள்ளது.
 
இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோய் எனப்படுவது ஒழுங்கற்ற இதய சந்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பாகும். இது இரத்தத்தில் கட்டிகள் தோன்றுவதற்கு வழிகோலுவதன் மூலமாக பாரிசவாதம், இருதய செயலிழப்பு மற்றும் இதயம் தொடர்பான மேலதிக நோய் நிலமைகளை உருவாக்குகின்றது. இந்நோயின் உருவாக்கமானது வயது வந்தோரிடையே அதிகமாகக் காண்படுகிறது. முதியவர்களின் எண்ணிக்கை எமது சமூகத்திலே அதிகரித்து வரும் நிலையில் இந்நோயின் சமூகப் பரம்பலைக் கண்டறிவது மிகவும் அவசியமானது.
 
இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோயானது மிகவும் பாரதுரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பினும் இதனுடைய சமூக ரீதியிலான பரம்பலை இலங்கை போன்ற நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளிலே மிகச் சிறிதளவே அறியப்படடுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்ட பாரிசவாதம் தொடர்பான தேசியப் பதிவேடானது குறிப்பிடத்தக்களவு வீதமான பாரிசவாதமானது இருதய சுருக்க நடுக்க நோயினால் ஏற்படுவதாக குறிப்பிடுகின்றது.

இவ்வாய்வானது இலங்கையின் வடமாகாணத்தில் 10000 பேரினை உள்ளடக்கிய குடித்தொகையில் மேற்கொள்ளப்படும் சமூக மட்டத்திலான ஆய்வின் ஊடாக இருதய நுண்ணார் சுருக்க நடுக்க நோயினுடைய பரவலைக் கண்டறிவதை முதலாவது படிநிலையாக கொண்டுள்ளது. இதில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்நோய்க்கான ஆபத்துக் காரணிகளையும் அத்தோடு நோயாளர்கள் தமக்குரிய மருத்துவ சேவைகளியை பெற்றுக் கொள்வதனையும் குறிப்பாக அதனுடைய தரத்தினையும் ஆராயவுள்ளோம்.

சமூக மட்டத்திலான ஆய்வின் முதற் கட்டமாக 9253 பங்கேற்பாளர்களிடமிருந்து கோவிட் பெருந்தொற்றின் மத்தியிலும் வெற்றிகரமாக தரவு சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது கட்டமாக தற்போது உடல் சார் அளவீடுகளையும் உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளோம். சமூக கணக்கெடுப்பின் ஆய்வுக்குட்படுத்தபட்ட பங்கேற்காளர்களுக்கு உதவி செய்யும் முகமாக Nat Intensive Care Surveillance-Mahidol-Oxford Research Unit (NICS – MORU)  எனும் நிறுவனத்தின் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூதாய குடும்ப நலப்பிரிவினால் இலவச தொலைபேசிச் உதவிச் சேவை ஒன்று உருவாக்கப்படடுள்ளது. இவ்வுதவிச் சேவையின் நோக்கம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உடல் நல ஆரோக்கியத்தைப் பேணுவதும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமாகும்.

இவ்வாய்வானது தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ நடைமுறைகளை நீண்டகால ஆய்வுகளின் ஊடாக உருவாக்கும் நிலையமொன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதினை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது கலாசார ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக காணப்படுகின்றது. இவ்வாய்வினை வினைத்திறனுடனும் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு சகல தரப்பினரதும் ஆய்வாளர்களினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post