தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தின் அடுத்தகட்டத்துக்கான ஆக்கபூர்வ ஆரம்பம்! சிறிதரன் - Yarl Voice தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தின் அடுத்தகட்டத்துக்கான ஆக்கபூர்வ ஆரம்பம்! சிறிதரன் - Yarl Voice

தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தின் அடுத்தகட்டத்துக்கான ஆக்கபூர்வ ஆரம்பம்! சிறிதரன்



தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி எடுத்துச்செல்வதற்கான ஆரம்ப முன்முயற்சியை, திருமலை மறைமாவட்ட ஆயர், அதிவணக்கத்திற்குரிய கலாநிதி.கி.நோயல் இம்மானுவேல் அவர்களும் தென்கயிலை ஆதீனத்தின் முதற் குருமகா சந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரும் இணைந்து முன்னெடுத்திருப்பது, போரின் நேரடித் தாக்கங்களால் கல்வி, கலை, கலாசார, மொழி, நில, இன அடையாள ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு, வலிதாங்கி நிற்கும் தமிழினத்தின் ஆழ்மனக் காயங்களுக்கு அருமருந்தாய் அமைந்துள்ளது. 

ஈழத் தமிழ்த் தேசிய இனம் சருகாக நெரிபட்டு, சிதிலம் சிதிலமாக சிதறுண்டு போய், நிர்க்கதியற்று அந்தரித்து நிற்க வேண்டுமென்றும், எமது வாழ்வியல் பரம்பரை இறைமையைப் பறித்தெடுக்க வேண்டுமென்றும், காலம் காலமாக எம்மீது இனவன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் பௌத்த சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநிற்கும் இந்தக் காலச்சூழலில், தமிழ்த் தேசிய இனம் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்படவோ, கூட்டுத் தலைமையொன்றின் கீழ் ஒன்றுபடவோ முடியாத கையறு நிலையில் மெல்லமெல்ல கூறுபடத் தொடங்கியுள்ளதை உணர்ந்து, காலத்தின் தேவையையும், இனத்தின் இருப்பை உறுதிசெய்ய வேண்டிய இறுதி நிலையையும் கருதி 

ஈழத்தின் தலைநகரிலிருந்து இரு மதத் தலைவர்கள் இணைந்து முன்னெடுத்திருக்கும் 'தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி' ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய விடுதலை வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை தரும் புதியதோர் ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. 

தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இம்முயற்சியானது, அரசியல் ரீதியாக கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் முழுமூச்சாய் ஈடுபட்டு வரும் புலம்பெயர் தமிழ் சமூகப் பரப்பிலும் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துமென நம்புகிறேன். 

தமது சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகளற்ற, நசுக்கப்பட்ட இனமாக இருந்துகொண்டு தனது இருப்பைத் தக்கவைப்பதற்காய் எல்லாவழிகளிலும் போராடத் தலைப்பட்டுள்ள தமிழினத்தின் நிலையறிந்து, இன நலன் ஒன்றையே இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பொதுமுயற்சி தடையின்றித் தொடர வாழ்த்தும் அதேவேளை ஈழத் தமிழ் மண்ணையும், மக்களையும் இதயசுத்தியோடு நேசிக்கும் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் காலக்கடமை உணர்ந்து இம்முயற்சியில் உரிமையோடு அணிசேர வேண்டுமெனவும்  கேட்டுக்கொள்கின்றேன்.


சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர், 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

0/Post a Comment/Comments

Previous Post Next Post