விடாது துரத்தும் ஐசிசி தோல்விகள்; தொடரும் சோகம்-முற்றுபெறுகிறதா கேப்டன் கோலியின் சகாப்தம்? - Yarl Voice விடாது துரத்தும் ஐசிசி தோல்விகள்; தொடரும் சோகம்-முற்றுபெறுகிறதா கேப்டன் கோலியின் சகாப்தம்? - Yarl Voice

விடாது துரத்தும் ஐசிசி தோல்விகள்; தொடரும் சோகம்-முற்றுபெறுகிறதா கேப்டன் கோலியின் சகாப்தம்?இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் விலக உள்ளதாக தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் நடையை கட்டுகிறது இந்திய அணி. 

அதனால் கேப்டனாக கோலி, நமீபியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்தியாவை வழி நடத்துவதே கடைசி போட்டியாக அமைந்துள்ளது. கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கேப்டன் பொறுப்பில் இருந்து இப்போது விலகியுள்ளார். 

இருந்தாலும் அந்த பொறுப்பில் அவர் மற்ற பார்மெட்களான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடருவாரா என்பது சந்தேகம் தான்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக கோலியின் செயல்பாடு குறித்து பார்க்கலாம்.

முடிவுக்கு வந்த மாவீரனின் கேப்டன் சகாப்தம்!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று பார்மெட்டையும் சேர்த்து 23,161 ரன்களை எடுத்துள்ளார். 

அதில் 118 அரைசதம், 70 சதங்களும் அடங்கும்.2014 முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை கோலி வழிநடத்தி வருகிறார்.

 தோனி கடந்த 2014-இல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவிக்க அந்த பொறுப்பை தனது தோள்களில் சுமக்க தொடங்கினார் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 65 போட்டிகளில் 38 வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியவர். 2016-17 முதல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் ரெகுலராக அணியை வழிநடத்தும் கேப்டனானார் கோலி.

95 ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தி 65 போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளார் கோலி. 49 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 29 வெற்றிகளை தேடி தந்துள்ளார்.

 கேப்டனாக அவர் இந்தியாவை வழிநடத்தி உள்ள போட்டிகளில் சராசரியாக 70 சதவிகித வெற்றிகளை அணி பெற்றுள்ளது.

கோலி வெல்ல முடியாத ஐசிசி கோப்பை!
டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மாதிரியான அந்நிய மண்ணில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

 இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மாதிரியான நாடுகளிலும் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

 இந்திய மண்ணில் அணியின் செயல்பாடு வேற லெவலாக இருக்கும். இதே போல ஒருநாள், டி20 தொடர்களில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் இரண்டு நாடுகள் நேரடியாக மோதிக் கொள்ளும் தொடர்களில் மட்டுமே.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் நாக்-அவுட் சுற்றுகளில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 50-ஓவர் உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி, நடப்பு டி20 உலகக் கோப்பை (சூப்பர் 12 சுற்றுடன்) என நான்கு முறை ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது கோலிக்கும் ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அதை அவர் நன்கு அறிந்தவர்.

இருந்தாலும் கேப்டனாக கோலியின் செயல்பாடு இந்திய கிரிக்கெட்டின் கல்வெட்டில் பலமாக பொறிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post