கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம்! ஐங்கரநேசன் வேண்டுகோள் - Yarl Voice கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம்! ஐங்கரநேசன் வேண்டுகோள் - Yarl Voice

கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம்! ஐங்கரநேசன் வேண்டுகோள்



பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப்பலம் பெறுகின்றன. 

நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாமும் இக் கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், 
உலகம் என்றும் இல்லாதவாறு எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையின்மையை எதிர் கொண்டுள்ளது. 

 கொரோனாப் பெருங் கொள்ளைநோயும், வீறு கொண்டெழும் காலநிலை மாற்றமும் கூட்டாகத் தாக்குதலைத் தொடுத்திருப்பதில் நாடுகள் யாவும் நிலைகுலைந்து போயுள்ளன. 

ஏழை- பணக்கார நாடுகள் என்ற பேதமின்றி எல்லா நாடுகளினதும் பொருளாதாரப் பலம் ஆட்டம் கண்டு வருகின்றது.  இவற்றைச் சரிவரக் கையாள இயலாத நிலையில் நாடுகளின் அரசியல் வலுவும் கேள்விக் குறியாகியுள்ளது.

காட்டு விலங்குகளில் உறையும் வைரசுக்கள் விகாரமுற்றுத் தாக்கியதால் கொடுங் கொரோனாத் தொற்றும், பூமி சூடாகித் தகிப்பதால் காலநிலை மாற்றமும் ஏற்பட்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 

காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான வாழிடங்களில் இருந்து அள்ளுகொள்ளையாகக் கடத்துவதன் மூலமும், கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளைக் கணக்கின்றிக் கபளீகரம் செய்வதன் மூலமும் இப் பேரிடர்களிற்கு மனிதர்களாகிய நாமே காரணமாகியுள்ளோம். 

இப் பேரிடர்கள்" இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழிவோம்" என்ற பாடத்தை எமக்கு வலுவாகப் போதித்திருக்கும் நிலையில், இப்போது சூழல் பாதுகாப்பினதும்  மர நடுகையினதும்  அவசியம் அதிகம் உணரப்பட்டுள்ளது.

நானிலம், ஐந்திணை என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்கள் மர வழிபாட்டைத்  தமது தொல் வழிபாட்டு முறையாக கொண்டிருந்தவர்கள். 

இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்து அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருந்தவர்கள்.

 போர்க்கால நெருக்கடிகளிலும் இயற்கையை நண்பனாக நேசித்துச் சூழல் காத்தவர்கள். ஆனால், இன்று பேரினத்துவ அரசியலாலும், உலக மயமாக்கலாலும் இயற்கை வளங்களைக் காவு கொடுத்து நிற்கின்றனர்.

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப் பலம் பெறுகின்றன. 

நிலத்தைக் கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன.

 நாமும் இக் கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல, எதிர் காலம் குறித்த நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம். ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post