- Yarl Voice - Yarl Voice



இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

வடக்கில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்  பிரதிநிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர்  தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை சரியாக ஆராய்ந்து அதனை இராஜதந்திர ரீதியில் நகர்த்த வேண்டிய தேவையுள்ளது. இவ்விடயம் தொடர்பில்  கடந்த வாரமும் யாழ் மாவட்ட ரீதியில் கலந்துரையாடி இருந்தோம். அதேபோல இன்றைய தினம் வடமாகாணத்திற்கு உட்பட்ட நான்கு கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடியுள்ளோம்.

இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலே நான்கு
மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் எங்களுக்கு ஆதரவு தருமாறும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எங்களோடு இணைந்து செயற்பட வருமாறும் கோரியிருக்கின்றோம்.

அதனடிப்படையில் எதிர்காலத்தில் வடக்கு கடற்றொழிலாளர்கள் ஒற்றுமையாக ஒரே குடையின்  கீழ்  செயற்படுவதற்கு  நான்கு மாவட்டங்களிலும் இருக்கின்ற கூட்டுறவுச் சமாசங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தான் எங்களுடைய நோக்கமாக காணப்படுகின்றது.

கடற்றொழிலாளர்களிடையே பிளவினை ஏற்படுத்தாது எமது ஒற்றுமையை வலுப்படுத்தி நாம் ஒற்றுமையாக தீர்வினை நோக்கி நகர்வதற்கு அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். கட்சி பேதமின்றி கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக ஒரே குடையின் கீழ் கையாள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் எம்முடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமல்  இருப்பதற்கு நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூகங்கள் புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம் என்றார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் ஜோன்சன்,  மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் ராஜா குரூஸ்,
பூநகரி கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் பிரான்சிஸ்,யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் அன்னராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post