ரஷ்ய ஆயுதங்கள் கொள்முதல்: இந்தியா மீது தடையா? அமெரிக்கா பரிசீலனை! - Yarl Voice ரஷ்ய ஆயுதங்கள் கொள்முதல்: இந்தியா மீது தடையா? அமெரிக்கா பரிசீலனை! - Yarl Voice

ரஷ்ய ஆயுதங்கள் கொள்முதல்: இந்தியா மீது தடையா? அமெரிக்கா பரிசீலனை!ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க அரசின் உயர் அதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. 

இதனையடுத்து அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்தியாவை விமர்சித்து வருகின்றனர்.
ரஷ்யாவுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள இந்தியா, கடந்த 2016 முதல் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியா மீது தடை விதிப்பது தொடர்பான முடிவு எடுக்க காலதாமதம் செய்து வருகிறது.

இச்சூழ்நிலையில், ஐ.நா. சபையில் தீர்மானத்தை ஆதரிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப் படுமா என்று அமெரிக்க குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக டொனால்ட் லூ கூறுகையில், ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தடை விதிக்கலாமா அல்லது விதிவிலக்கு அளிக்கலாமா என்பது குறித்தும் முடிவு எடுக்கவில்லை. இந்தியா, எங்களது நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளி. ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றிச் செல்கிறோம். ரஷ்யாவிடம் இருந்து மிக் 29 ரக போர் விமானங்கள், ஹெலிகொப் டர்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்குவதை இந்தியா ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது குறித்து குவாட் அமைப்பின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸி. நாடுகள் ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தியா நடுநிலை வகிக்கிறது. ரஷ்யா தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ள இந்த கூட்டம் வீடியோ கொன்பரன்சிங் முறையில் நடைபெறவுள்ளது. அதில், ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸி. பிரதமர் ஸ்கொட் மொரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டா சுகா ஆகியோர் கலந்து கொள்ள உளளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post