போதை தாய்.. பள்ளியில் கிண்டல் கேலி - டெக்சாஸ் கொலையாளியின் அதிர்ச்சி ஃபிளாஷ்பேக்! - Yarl Voice போதை தாய்.. பள்ளியில் கிண்டல் கேலி - டெக்சாஸ் கொலையாளியின் அதிர்ச்சி ஃபிளாஷ்பேக்! - Yarl Voice

போதை தாய்.. பள்ளியில் கிண்டல் கேலி - டெக்சாஸ் கொலையாளியின் அதிர்ச்சி ஃபிளாஷ்பேக்!போதைக்கு அடிமையான தாய் ஒருபுறம்; பேச்சு குறைபாட்டால் பள்ளியில் சக மாணவர்களின் கேலி கிண்டல் மறுபுறம் என இளம் வயதிலேயே பல இன்னல்களுக்கு டெக்சாஸ் கொலையாளி உள்ளாகியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நேற்று இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரையும் போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் குறித்து போலீஸார் நடத்தி வரும் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

துன்பம் நிறைந்த குழந்தை பருவம்...

சால்வடோர் ரோலாண்டோ ரோமோஸ் (18) என்ற அந்த இளைஞர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தான். இவருக்கு 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்டனர். தாயின் பராமரிப்பில் இருந்த ரோமோஸுக்கு 5 வயது வரை பேச்சு வரவில்லை. அதன் பிறகு 7 வயதில்தான் அவர் பேச தொடங்கியிருக்கிறார். ஆனாலும் அவரது பேச்சு சீராக இல்லாமல் திக்கி திக்கியே இருந்துள்ளது. தாயுடன் இருந்த போதிலும் சிறுவன் ரோமோஸுக்கு தாய் பாசமும், அரவணைப்பும் கிடைக்கவில்லை. திருமண வாழ்க்கை கசந்ததால் அவரது தாய் போதைப் பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் இரவு போதை ஊசியை செலுத்திக் கொள்ளும் அவரது தாய், சிறுவன் ரோமோஸை சரமாரியாக தாக்குவாராம்.

"உன் தந்தையின் ஜாடையில் ஏன் பிறந்தாய்.." எனக் கூறி ரோமோஸை அவர் அடிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் ஒருவித அச்சத்துடனேயே ரோமோஸ் தனது பால்ய பருவத்தை கழித்திருக்கிறார்.

வீட்டில்தான் தாயார் சித்ரவதை செய்கிறார் என்றால் பள்ளிச் சூழலும் சிறுவன் ரோமோஸுக்கு பிடித்தமானதாக இல்லை. திக்கி திக்கி பேசுவதால் ரோமோஸை சக மாணவர்கள் மோசமாக கேலி செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, தினமும் பள்ளி முடிந்த பின்னர் வகுப்பில் இருக்கும் சில முரட்டு மாணவர்கள் ரோமோஸை தாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

ஆசிரியர்களிடம் இதுகுறித்து ரோமோஸ் பல முறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 9-ம் வகுப்பு படிக்கும் போதே பாதியிலேயே அவர் பள்ளியில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே, அவரது தாயாரும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் தனது பாட்டியின் வீட்டில் வசித்து வந்த ரோமோஸ், அதே பகுதியில் இருக்கும் ரெஸ்டாரண்டில் வேலை செய்து வந்துள்ளார்.

தனிமை விரும்பி... துப்பாக்கி மீது காதல்...

வேலை செய்யும் இடத்திலும் சக ஊழியர்கள் யாரிடமும் ரோமோஸ் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. வேலை முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க ரோமோஸ் மட்டும் தனியாக சென்று அமர்ந்து கொள்வாராம். இவ்வாறு தனிமை விரும்பியாக இருந்த ரோமோஸுக்கு துப்பாக்கி மீது அலாதி பிரியம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு 18 வயது ஆனதும் (சில மாதங்களுக்கு முன்பு) தான் சேகரித்து வைத்த பணத்தில் இரண்டு நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் துப்பாக்கிகளின் புகைப்படங்களைதான் ரோமோஸ் வைத்திருக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ரோமோஸ் அரங்கேற்றி இருக்கிறார்.

இதுகுறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், "குதூகலம் நிறைந்ததாக இருந்திருக்க வேண்டிய குழந்தைப் பருவம் ரோமோஸுக்கு கிடைக்கவில்லை. சக மாணவர்களின் கிண்டல் கேலி அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் எப்போதுமே அவருக்கு பள்ளி மாணவர்கள் மீது ஒருவித கோபம் உருவாகியிருக்கும். இதுவே பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணமாக அமைந்திருக்கலாம்" என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post