யாழ் பல்கலையில் கறுப்பு ஜீலை ! அரைக்கம்பத்தில் கறுப்பு கொடி! பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பொலிசாரால் குழப்பம்..!! ! - Yarl Voice யாழ் பல்கலையில் கறுப்பு ஜீலை ! அரைக்கம்பத்தில் கறுப்பு கொடி! பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பொலிசாரால் குழப்பம்..!! ! - Yarl Voice

யாழ் பல்கலையில் கறுப்பு ஜீலை ! அரைக்கம்பத்தில் கறுப்பு கொடி! பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பொலிசாரால் குழப்பம்..!! !




 யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

மேலும் 39வருடங்களின்  முன் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை,

தற்காலத்திலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை இடம்பேற்றே செல்கிறது.ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் யாழ் பல்கலையில் நினைவேந்தல் நிறைவுபெறும் தருணத்தில் இரண்டு பொலிசார் மோட்டார் வாகனத்துடன் பிரதானவாயிலருகே உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக நின்றனர்.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமாரால் எதற்காக பல்கலைக்கழகத்திற்குள் பொலிசார் நுழைந்தனர் என பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வினவியபொழுது நீங்கள் பல்கலைக்கழகத்தின் எந்த பகுதியிலும் கொடியேற்றுங்கள் பிரதான கொடிக்கம்பத்தில் ஏற்ற வேண்டாம் கறுப்பு கொடியை கம்பத்தில் இருந்து அகற்றுங்கள் என தெரிவிக்கப்பட்டநிலையில்
மாணவர்களால்  கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உள்நுழைந்த இரு பொலிசாரும் வெளியேறிய நிலையில் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு வெளியே  பொலிசார் குவிக்கப்பட்டு குறித்த  அரைக்கம்பத்தில் பறந்த கறுப்பு கொடியினை  காணொளி எடுத்த நிலையில் சிறிது நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அடக்குமுறைகளின் உச்சத்தை தொட்ட இன்றைய கறுப்பு ஜீலை நினைவு தினத்தில் கூட பொலிசாரின் செயற்பாடு மீண்டும் ஒடுக்குமுறையை இன்றைய நாளில் எடுத்துகாட்டுகின்றது.

பல்கலைக்கழகத்தற்குள் பொலிசார் மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக உள்நுழைந்தமைக்கு  எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் எனவும் பல்கலை மாணவர்களின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post